உளநலத்தை விளங்கிக் கொள்ளல்
கட்டிளமைப் பருவத்தினரின் நல்வாழ்வுக்கு சிறந்த உளநலம் முக்கியமானது. என்றாலும், உளநலம் என்றால் என்ன? அது ஏன் அந்தளவு முக்கியமானது?
உளநலம் எனும் எண்ணக்கரு சமூக மற்றும் மனவெழுச்சி ரீதியான நல்வாழ்வினை விவரிக்கின்றது. ஆரோக்கியமாக வளரவும், நீங்கள் செய்ய வேண்டிய கருமங்களைச் செய்துகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், பலமான உறவுகளைக் கட்டியெழுப்பவும், மாற்றத்துக்கு இசைவாக்கமடையவும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கவும் சிறந்த உளநலம் அவசியம். அத்துடன், சிறந்த உளநல ஆரோக்கியமானது சிரமம் நிறைந்த நிலைமைகளை சமாளிப்பதற்கான உங்களின் மீளெழும் ஆற்றலைப் பலப்படுத்துகின்றது. அவ்வகையில், கட்டிளமைப் பருவ உளநல ஆரோக்கியமானது இளவயதில் மாத்திரமன்றி வாழ்க்கை பூராவும் உங்களின் “மீளெழும் ஆற்றலை” விருத்திசெய்யவும் நல்வாழ்வினைப் பேணவும் உதவும்.
மீளெழும் ஆற்றல் என்றால் என்ன?
ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் கஷ்டங்கள் அல்லது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். மீளெழும் ஆற்றல் என்பது அத்தகைய கடின காலத்திற்கு இசைவாக்கமடையவும், “ஒரு கஷ்டமான நிலைமை அல்லது நிகழ்வின் பின்னர் விரைவாக சாதாரண நிலைமைக்கு மீ்ண்டு விடவும்” மற்றும் கஷ்டமான காலத்திற்கு முன்பிருந்தது போன்ற ஆற்றலை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் ஒருவர் தன்னகத்தே கொண்டுள்ள இயலுமையாகும். நீங்கள் மீளெழும் ஆற்றலுடையவராயின், முகங்கொடுக்கும் கஷ்டமான நிலைமைகளிலிருந்து சில படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மனவெழுச்சி ரீதியான வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன் “சமாளிக்கும் பொறிமுறைகள்“ மற்றும் “வாழ்க்கைத் திறன்களை“ மேலும் பலப்படுத்தும்.
“சமாளிக்கும் பொறிமுறைகள்“ மற்றும் “வாழ்க்கைத் திறன்கள்“ என்பன நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது பிரயோகிக்கும் மூலோபாயங்களாகும். அவை நோவினைதரக்கூடிய அல்லது கஷ்டமான உணர்வுகளை நிர்வகிக்கவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உதவும். எம்மிடம் இருக்கும் ஆரோக்கியமான, நேர்மறை “சமாளிக்கும் பொறிமுறைகள்“ மற்றும் “வாழ்க்கைத் திறன்கள்“ எமது உள நலத்தைப் பாதுகாப்பதோடு எமது வாழ்க்கையைச் சிறப்பாக்குவதற்கு உதவுகின்றன!
மேலும், சிறந்ததொரு செய்தி யாதெனல், இளமைப் பருவத்திலுள்ள சகலரும் சமாளிக்கும் மற்றும் வாழ்க்கைத்திறன்கள், மீளெழும் ஆற்றல் மற்றும் உளநலம் என்பவற்றை பலப்படுத்துவதற்கான ஆற்றல்களுடனேயே வாழக்கின்றனர் என்பதாகும்.
இவ்விடயம் தொடர்பாக பயன்மிக்க ஆலோசனைகளும் உத்திகளும் இப்பக்கத்தில் உள்ளன. என்றாலும், முதற் கட்டமாக உளநலம் பற்றி உங்களின் அறிவினைச் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.