பதற்றம்
பதற்றம் என்பது அபாயம், தொந்தரவு, அச்சுறுத்தல் அல்லது ஏதேனுமொரு விரும்பத்தகாதது இடம்பெறக்கூடும் என நாம் நினைக்கும் போது தோன்றும் ஆரோக்கியமானதொரு எதிர்வினையாகும். நாம் பதற்றமடையும் போது எங்களுக்கு மனவெழுச்சி மற்றும் உடல் ரீதியான எதிர்வினைகள் இருக்கும். உதாரணமாக, விளிம்பில் இருப்பதாக உணர்தல், விரைவாக உணர்ச்சிவசப்படுதல், பயப்படுதல் மற்றும் பீதியடைதல். உடல் ரீதியாக எமது மூச்சும் இதயத்துடிப்பும் அதிகரிப்பதுடன் எமது உடல் வியர்க்கும் அல்லது நாம் இறுக்கமாக உணர்வோம்.
பதற்றம் இளம் பருவத்தினருக்குப் பொதுவானது. ஏனெனில், அவர்கள் மாற்றங்கள், புதிய அனுபவங்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சில விடயங்கள் ஓரளவு பரபரப்பாக இருக்கலாம். சிலவேளைகளில் அவை கட்டுப்பாட்டினை மீறியதாக உணரலாம். எனவே, பதற்றத்தை உணர்வது சாதாரணமானது.
தெளிவானதொரு அச்சுறுத்தல் அல்லது ஆபத்தில்லாமல் பதற்றத்துக்குள்ளாகும் போது அது வெறுமனே ஒரு பிரச்சனையாக அல்லது உள நோயாகவே இருக்கும். பதற்றத்தின் போது நீங்கள் நடந்துகொள்ளும் விதம் அன்றாட நடவடிக்கைகளை கையாளுவதில் தடைகளை ஏற்படுத்தினால் அது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடும்.
அறியப்படாத காரணத்துக்காக பதற்றத்தின் உடல் ரீதியான அறிகுறிகள் வெளிப்படும் போது அவரை சாந்தப்படுத்துவதற்கு ஒருவரின் உதவி இல்லாதபட்சத்தில் “பீதித் தாக்குதலுக்கு“ ஆளாகலாம். இந்த அறிகுறிகள் மிகவும் தீவிரமானவை. அதாவது, நெஞ்சு படபடத்தல், வேகமாக சுவாசித்தல், தலை சுற்றல், விறுவிறுப்பு அல்லது உடல் சிலிர்த்தல் உள்ளிட்ட மிகவும் தீவிரமான உணர்வுகள் ஏற்படலாம். ஒருவர் இந்த அறிகுறிகளை உணரும் போது தனக்கு மாரடைப்பு வருவதைப் போல அல்லது தான் மரணிக்கப்போவதாகவோ எண்ணக்கூடும். எனினும், அச்சம், பீதித் தாக்குதல் என்பன உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தாது.
பதற்றத்தைக் கையாளுவதற்கான உத்திகள்
நீங்கள் பதற்றப்படும் போது முதலில் செய்ய வேண்டியது யாதெனில் என்ன இடம்பெறுகின்றதென விளங்கி சிலநேரங்களில் பதற்றத்தினை உணர்வது சாதாரண விடயம் என்பதை அறிந்துகொள்வதாகும். நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பதற்றம் அதிகரிக்குமே அன்றி குறையாது. மேலும் நீங்கள் கீழுள்ள விடயங்களையும் பரீட்சித்துப் பார்க்கலாம்.
- நீங்கள் நம்பும் ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என எடுத்துக்கூறி அத்தகைய உணர்வுகளுக்கு பங்களிப்புச் செய்பவற்றைக் கண்டறிவதற்கு முயற்சி செய்யுங்கள். – அதாவது, அச்சுறுத்தல் அல்லது உங்களைக் கவலைப்படுத்துகின்ற விடயம் யாது என அறிந்துகொள்ள முயற்சி செய்யவும்? அது சிறியதாகவோ அல்லது அற்ப விடயமகாவோ தோன்றினாலும் அதைப் பெயரிடுங்கள்.
- உங்களின் எண்ணம் மற்றும் உடலைத் தளர்த்துவதற்கு உதவும் சில நடவடிக்கைகளை, அதாவது சாதாரண உடற்பயிற்சி அல்லது உங்களுக்கு மகிழ்வூட்டும் விடயங்களை முயற்சி செய்யுங்கள். உங்களின் விருப்பத்துக்குரிய இசைக்கேற்ப சப்தமாக பாட்டுப் பாடுவதும் உண்மையிலேயே நல்லதொரு நடவடிக்கையாகும்.
- ஆழ்ந்த மூச்செடுத்தல் பயிற்சியைக் கற்று நடைமுறைப்படுத்துங்கள்.
- உங்களை துன்புறுத்துகின்ற அல்லது மனவழுத்தத்திற்கு உட்படுத்துகின்ற செயல்களை ஒட்டுமொத்தமாகவே தவிர்த்துக்கொள்ளாது நீங்கள் நம்புகின்ற ஒருவரிடமிருந்து ஒத்துழைப்பினைப் பெற்று சிறிது சிறிதாக ஆரம்பியுங்கள். சிறிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதற் கட்ட இலக்குகளை அடைந்ததன் பின்னர் அவற்றை விட கஷ்டமான இலக்குகளை நோக்கிப் பயணியுங்கள்.
- உங்களின் பதற்றத்தினை சமாளிப்பதில் பாதியளவு வெற்றியடைந்தாலும் உங்களின் முயற்சிகளை அடையாளங்கண்டு கொள்ளுங்கள். பயத்துக்கு முகங்கொடுப்பது கஷ்டமானது.
- சில சமயங்களில், உங்களைப் போன்று அதிகமான கட்டிளம் பருவத்தினர்கள் பெரும்பாலும் பதற்றத்தை அனுபவிப்பதோடு பலவிதமான மனவெழுச்சிகளைக் கடந்து செல்ல நேரிடுவதையும் நினைவிற்கொள்ளுங்கள். உண்மையில் இது உங்களின் வளர்ச்சியின் ஒரு கட்டமாக இருப்பதுடன், இந்நிலைமைகளுக்கு ஈடுகொடுப்பதற்கு கற்றுக்கொள்வதென்பது பருவமடைதலுக்கான பாதையாக இருக்கும்.
- உங்களின் பதற்றம் மிகவும் தீவிரமாக இருப்பின் உங்களின் பாடசாலை ஆலோசகர், வைத்தியர் அல்லது உதவிச் சேவைகளிலிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.